நிம்மதியாய் செத்திருப்பேன்

- நரமிருகம் -



எழுதப் படிக்கத் தெரிந்தும் பாமரனாய் வாழும் கேவலமான மனித புத்திகளின் கவனத்திற்கு ஒரு கவிதை !!!

நாங்கள்
நரப் பூச்சிகளின்
நன்றி மறுப்பால்
... அறுப்புக்குப் போகும்
அடிமாடுகள்

வயதான ஒருவன்
நோய் வந்த நண்பன்
பால் வறண்ட ஒருத்தி
முடமான முரடன்
நகரும் பொட்டலமாய்
சாகுமிடம் நோக்கி

நான்கு நாட்கள்
நீரில்லாமல்
நின்றபடி பயணம்
கால் தோய்ந்து
சாய்ந்து கொள்ள
சக மாட்டு முதுகுகள்
வயிறு காயும்
முதல் நாள் மட்டுமே
மலஜலம் அவதி

உழைப்பை உண்ட பின்
உடம்பையும் கூறு கேட்டாய்
பால் மட்டும் போதாதென்று
உதிரமும் உறிஞ்சக் கேட்டாய்

செத்தும் கொடுக்கிறோம்
சுவைத்துக் கொள்ளுங்கள்
ஆனால் எங்கள்
மரணப் பயணத்தை
சிறிதேனும்
மரியாதைப் படுத்துங்கள்

போன ஆண்டு பொங்கலுக்கு
பொட்டிட்டுப் பூ வைத்து
கடவுளாய் படையல் இட்ட
நீயே வெட்டி இருந்தால்
நிம்மதியாய் செத்திருப்பேன்

- ஷான்
- Ramchand Photography