அதிர்ச்சியான விபரங்க-வெல்லம்

சிறுநீரகத்தை குறிவைக்கும் கெமிக்கல் வெல்லம்!



"வெள்ளையாகக் கிடைக்கிற எந்த உணவும் ஆரோக்கியமானதில்லை. பால், அரிசி சாதம், மாவு, சர்க்கரை மற்றும் உப்பு ஆகிய ஐந்தும் அதில் பிரதானம்."

ஆரோக்கிய வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் இருக்கிற பிரபலங்கள் பலரும் இவற்றைத் தவிர்ப்பதாக சொல்லக் கேட்டிருக்கலாம். காபி, டீயை விட்டால், பாலைத் தவிர்க்கலாம். கோதுமைக்கு மாறினால், அரிசி சாதத்தை மறக்கலாம். உப்பைக் குறைத்தால் பிரச்சினையில்லை. மாவு உணவுகளில் இருந்து ஒதுங்கியிருப்பதில் பெரிய சிரமங்கள் இருக்க வாய்ப்பில்லை.

சர்க்கரை...?

"அதுக்குப் பதிலாதான் வெல்லம் இருக்கே.... வெல்லத்துல இரும்புச்சத்து அதிகம். கலோரி கம்மி. காபி, டீ உள்பட, சர்க்கரை தேவைப்படற எல்லா உணவுகள்லயும் வெல்லம் சேர்க்கலாம். அதுதான் ஆரோக்கியம்" - நூற்றுக்கிழவி முதல் சத்துணவு நிபுணர்கள் வரை பலரும் இதை வலியுறுத்துவதை மறுக்க முடியாது. அப்படியானால் வெல்லம் என்பது ஆரோக்கியமானதா?

ஆமாம். அதில் எந்தச் சந்தேகமும் வேண்டியதில்லை. ஒரு துண்டு வெல்லத்தில் புரோட்டீன், தாதுச் சத்து, இரும்பு, கேரட்டீன், தையமின், கால்சியம், பாஸ்பரஸ், ரிபோஃபிளேவின், நியாசின் என அத்தனை சத்துக்களும் உண்டு.

கரும்பிலுள்ள அத்தனை சத்துக்களும் உறிஞ்சப்பட்ட பிறகு தயாரிக்கப்படுவதே சர்க்கரை. வெல்லம் அப்படியில்லை. கரும்புச்சாற்றைக் கடைசி சொட்டு தண்ணீர் வற்றும் வரை காய்ச்சினால் பாகு மாதிரி வரும். அதிலிருந்து வெல்லம் தயாரிக்க வேண்டும். அங்கேதான் ஆரம்பிக்கிறது பிரச்சினை. அந்தப் பாகை சுத்தப்படுத்தாமல் அப்படியே உபயோகிக்க முடியாது. பெரியளவில் வெல்லம் தயாரிக்கிறவர்கள், கரும்புச் சாற்றை சுத்தப்படுத்த, சோடியம் ஹைட்ரோசல்ஃபேட் என்கிற ரசாயனத்தை மிக அதிக அளவில் சேர்க்கிறார்கள். வெல்லத்தின் வெளிர் நிறத்துக்காக ஆக்சாலிக் அமிலம், சூப்பர் பாஸ்பேட் மற்றும் டிடெர்ஜென்ட்டும் சேர்க்கப்படுகிறது. இதில் ஆக்சாலிக் அமிலம் என்பது நம் உடலில் உள்ள திசுக்களை அரித்து, சிதைக்கக்கூடியது. தவிர, ரத்தத்தில் உள்ள கால்சியத்தை அறவே நீக்கி, சிறுநீரகத் தொந்தரவுகளை உண்டாக்கி, ஒரு கட்டத்தில் சிறுநீரகம் பழுதடையவும் காரணமாகிறது.

வெல்லத்துக்கு ஆயுள் கம்மி. காற்றிலுள்ள ஈரப்பதத்தை கிரகித்துக் கொள்ளும். அதிலுள்ள பாக்டீரியாவின் தாக்கத்தால் சீக்கிரமே கெட்டுப் போகும். இதைத் தவிர்க்க, தயாரிப்பாளர்கள் பென்சீன் என்கிற ரசாயனத்தைச் சேர்க்கிறார்கள்.

பிளாஸ்டிக், டிடெர்ஜென்ட், உரம் மற்றும் ரசாயனப் பொருள்கள் தயாரிப்புகளில் பிரதானமாக சேர்க்கப்படுவதுதான் இந்த பென்சீன். இதை உபயோகிப்பவர்களுக்கு மயக்கம், தலைசுற்றல், ஞாபகமறதி போன்றவை உண்டாகலாம். தொடர்ந்து நீண்டகாலத்துக்கு உபயோகிக்கும்போது, ரத்தத்தை சுண்டச் செய்து, எலும்புகளை பாதித்து, புற்றுநோய்க்குக் கூடக் காரணமாகலாம்.

வெல்லத்தில் இத்தனை வில்லங்கமா? இதற்கு என்னதான் மாற்று? சத்துணவு ஆலோசகர் அம்பிகா சேகர் சொல்கிறார்.

"சர்க்கரையோட ஒப்பிடும்போது வெல்லம் எவ்வளவோ பரவாயில்லை. இன்னிக்கு ரசாயனக் கலப்பில்லாத வாழ்க்கை சாத்தியமே இல்லை. கிராமங்கள்ல, வீட்லயே சுத்தமான முறைல வெல்லம் தயாரிப்பாங்க. அதுல எந்த கலப்படமும் இருக்காது. சாதாரண வெல்லத்தைவிட, பாகு வெல்லமும் பனை வெல்லமும் சிறந்தது. சத்துகளும் அதிகம்" என்கிறார் அம்பிகா சேகர்.

குடிக்கிற தண்ணீரில் இருந்து சுவாசிக்கிற காற்று வரை சகலத்திலும் கலப்படம். வெல்லம் மட்டும் விதிவிலக்கா என்ன?

சரி இதற்கு என்ன தான் தீர்வு?

"ஆர்கானிக் முறையில் தயாரிக்கப்படுகிற எந்த உணவுப் பொருளும் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம். வெல்லமும் அப்படியே".

ஆரோக்கியத்தைவிட அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற மனப்பான்மைதான் இன்னிக்கு இருக்கு. கைக்குத்தல் அரிசி கலர் கம்மியா இருக்கும். அது ஆரோக்கியமானது. ஆனா, வெள்ளை வெளேர்னு பாலீஷ் பண்ணின அரிசி தான் ஜனங்களைக் கவருது. அதுல சத்தே கிடையாது. எண்ணெய்லயும், ரீஃபைன் பண்ணாதது கலர் கம்மியா, கொழகொழப்பு அதிகமா இருக்கும். அதுல சத்துக்கள் அதிகம். ஆனா ரீஃபைன்ட் பண்ணின பிறகு கண்ணாடி மாதிரி பளபளனு, சத்துகள் நீக்கப்பட்டதைத்தான் விரும்பறாங்க.

இதே மனப்பான்மை, வெல்லத்துக்கும் பொருந்தும். டார்க் பிரவுன் நிறத்துல இயற்கையா தயாரிக்கிற வெல்லத்தை விட்டுட்டு, மஞ்சள் நிறத்துல கிடைக்கிறதைத் தான் விரும்பறாங்க. இதுல நிறத்துக்காக கெமிக்கல் சேர்க்கப்படுது. வெல்லத்தோட உப்புச் சுவைக்கும் அதுதான் காரணம்.

இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு. ஆர்கானிக் உணவுகளுக்கு மாறிடறதுதான். ரசாயன உரங்கள் இல்லாம, இயற்கையான உரங்கள் கொண்டு பயிரிடப்படறது தான் ஆர்கானிக் விவசாயம். எல்லா உணவுப் பொருள்களும் இன்னிக்கு ஆர்கானிக் முறையால் உற்பத்தியாகிக் கிடைக்குது. வெல்லம் உள்பட. இது பார்க்கிறதுக்கு பளீர்னு இல்லாம, டார்க் பிரவுன் நிறத்துலதான் இருக்கும். சாதாரண வெல்லத்துக்கும், ஆர்கானிக் வெல்லத்துக்கும் விலையில் 20 முதல் 30 சதவிகிதம் விலை வித்தியாசம் இருக்கும். ஆனா, ஆரோக்கியத்தோட ஒப்பிடறப்ப, அந்த விலை பெரிய விஷயமில்லை."

சரி... நல்ல வெல்லத்தை எப்படித்தான் அடையாளம் காண்பது?



முதல் விஷயம், வெளுத்த மஞ்சள் நிற வெல்லம்தான் நல்லது என நினைக்காதீர்கள். ரசாயனம் சேர்க்காத நல்ல வெல்லம் டார்க் பிரவுன் நிறத்தில் இருக்கும். கலப்பட வெல்லத்தை உபயோகித்து, கண்ட கண்ட வியாதிகளை இழுத்து விட்டுக்கொண்டு, மருத்துவர்களுக்கு மொய் எழுதுவதற்கு பதில் கொஞ்சம் மெனக்கெட்டு தேடி நல்ல வெல்லம் உபயோகிக்கலாம்.