பால்-வெண்ணிறத்தில் ஒரு விஷம்

பால். அன்றாடம் நம் வாயில் நுழையும் அத்தியாவசியப் பொருளாக மாறிவிட்டது.
காலை எழுந்தவுடன் காபி;
பின்பு வாயில் உருகும் நெய் தோசை
என்று பாரதியார் பாட்டு எழுதும் அளவிற்கு பால் மற்றும் பால் பொருட்கள் நம் அன்றாட வாழ்வில் கலந்துவிட்டன. தொலைக்காட்சி விளம்பரங்களும், நகைச்சுவையாய் சித்தரிக்கப்படும் கார்டூன் படங்களும் நம்மை தினம் தினம் முட்டாளாக்கி சம்பாதிக்கின்றன. செண்பகமே செண்பகமே என்று பாட்டுப் பாடி பால் கறந்து சினிமாவும் நம்மை முட்டாளாக்கிவிட்டது. உண்மையில் பால் எனும் வெண்மையான திரவத்திற்குப் பின்னால் உள்ள இருண்ட உண்மை தெரியுமா உங்களுக்கு? நாம் தெய்வமாக நினைக்கும் பசுக்கள் படும் துயரம் பற்றி அறிவீர்களா? பால் பொருட்களை தவிர்த்து வாழ்தல் உண்மையில் ஆரோக்கியம் என்பதை அறிவீர்களா? அறிந்து கொள்ள மேலும் படியுங்கள்.
இந்தக் கட்டுரையை எழுதும் முன் நான் பாலைப் பற்றி என்ன நினைத்திருந்தேன் என்று கூறி விடுகிறேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் முட்டை மற்றும் பால் பொருட்களை விரும்பி சாப்பிட்டிருக்கிறேன். முட்டையில் உயிர் இல்லை என்றும் பால் கறக்காமல் விட்டால் பசு வேதனைப்படும் என்றும் எனக்கு கற்பிக்கப்பட்ட முட்டாள் தனமான கொள்கைகளைப் பேசி விதண்டாவாதம் செய்து என் தவறுகளை நியாயப்படுத்தியிருக்கிறேன். ஒரு இஸ்லாமிய அன்பர் என்னிடம் பால் சாப்பிடுவதைப் பற்றி வாதாடினார். நான் வழக்கம் போல விதண்டாவாதம் செய்து என் தவறை நியாயப்படுத்தினேன். இப்பொழுது நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. ஆனால் அவர் என்னிடம் கேட்ட கேள்விகள் என்னை சிந்திக்கச்செய்தன. பால் உண்மையில் கொடூரமானதா? பால் இல்லாமல் வாழ முடியுமா? என்ன நடக்கிறது பால் பண்ணைகளில்? பசுக்கள் துன்புறுத்தப்படுகின்றனவா? இத்தகைய கேள்விகள் என்னுள் எழுந்தன. கேள்விகளுக்கு பதில் காண முற்பட்டேன். அந்த பதில்களும், என்னை ஒரு நனிசைவனாய் மாறச் செய்த காரணங்களும் இங்கே...


அமைதியாக மென்று கொண்டிருக்கும் வாயும் நிசப்தமான கண்களும் பசுக்களை இவ்வுலகில் எந்த விதப் பற்றும் இல்லாமல் திருப்தியாய் வாழ்வது போல் காட்டிவிடும். ஆனால் அவற்றின் ஆழமான கரிய நிறக் கண்களுக்கு பின்னால் இருக்கும் சங்கதிகள் பல.
வாயில்லா ஜீவன் என்று முத்திரை குத்தப்பட்டிருக்கும் அந்தப் பசுக்கள் உண்மையில் வாயை கண்களில் கொண்டிருக்கின்றன. ஆனால் மனிதன் தான் அதை கவனித்துக் கேட்கத் தவறி காதில்லா ஜீவனாக வலம் வருகிறான் என்பது மிகவும் கசப்பான உண்மை. 
நாய் பூனை போன்ற செல்லப் பிராணிகள் போன்றே மாடுகளும் கூட ஒரு அலாதியான உயிரினம் தான். அவைகளும் தனித்தன்மை பல கொண்டு தமக்குள்ளே வெவ்வேறு விதமான குணநலன்களைப் பெற்றிருக்கின்றன. சில முரண்டு பிடிக்கும், சில கூச்சம் கொண்டு ஒதுங்கி நிற்கும். சில நட்பு பாராட்டும், சில ஆதிக்கம் செலுத்தும். சமீப காலங்களில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் பலவும் பசுக்கள் புத்திக்கூர்மை நிறைந்தவை என்று நிரூபிக்கின்றன. பசுக்கள் தமக்குள் இனம் கண்டு பழகுவதையும், நட்பு பாராட்டுவதையும், நிகழ்ச்சிகளை நீண்ட காலம் நினைவு பாராட்டுவதையும், எதிர்காலம் பற்றி வருத்தம் கொள்வதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து நிரூபித்துள்ளார்கள். மேலும் மனிதர்களைப் போலவே வெற்றியைக் கொண்டாடும் தன்மையும், பாவனைகள் செய்து சந்தோஷங்களைப் பறிமாறிக் கொள்கின்றன என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிக்கல் என்னவென்றால், அவை தோலுக்காகவும், மாமிசத்துக்காகவும் இனப்பெருக்கம் செய்யப்பட்டு கொல்லப்படுகின்றன. பிற ஜீவராசிகளைப் போன்றே அவைகளும், குடும்பத்தில் இருந்து பிரிக்கப்படுவதையும் கொல்லப்படுவதையும் விரும்புவதில்லை. அவை பிரிவின் சோகத்தை ஆழமாக உணர்கின்றன. பசுக்கள் 7 அடி உயரம் கொண்ட சுவற்றை தாண்டியும், நீந்தியும், பல மைல்கள் நடந்து சென்று தன்னிடம் இருந்து பிரிக்கப்பட்ட கன்றை சேர போராட்டங்கள் பல செய்கின்றன. ஆனால் ஆதிக்கம் செலுத்தும் மனிதன் மனிதனாக இல்லாமல் போவதால் அவை கொல்லப்படுகின்றன. பெற்ற தாய் முன்னே பிள்ளை கொல்லப்பட்டு தோலுரிக்கப்படும் அவலம் தோல் பட்டறைகளில் நடக்கிறது. மனிதத்தை உலகுக்கே எடுத்துக் கூறும் வேதங்களும் இதிகாசங்களும் நிறைந்த நம் நாடு பணத்தை நோக்கி சுழல்வதால் ஏற்பட்ட மாய வலையில் மனிதம் மறைந்து போய்விட்டது. :( 


பொய்யான படிப்பிணைகள்:

பசுக்கள் பற்றிய பல பொய்யான படிப்பினைகள் கலாச்சாரம் என்ற பெயரிலும் மதங்களின் பெயரிலும் இங்கே மனிதர்களுக்கு கற்பிக்கப் படுகின்றன. ஒரு புறம் கோயில்களில் சிலை வைத்துக் கும்பிடும் அளவிற்கு உச்சத்தில் வைக்கப்படும் பசுக்கள் மறுபுறம் வாசலில் போடும் செருப்புக்கும் கீழான நிலையில் நடத்தப்படுவது நம் நாட்டில் தான். ஆன்மிகத்தைப் பற்றிப் பேசுபவர்கள் கூட தோல் செருப்பு அணிவதையும் தோல் பைகள் வாங்குவதையும் தங்கள் செருக்கைக் காட்டும் பெருமையாக நினைக்கிறார்கள். அந்தப் படிப்பிணைகளைத் தகர்த்து எறிய இக்கட்டுரை உதவும் என நம்புகிறேன்.

1.பசுக்கள் பால் கொடுக்கும் இயந்திரங்களா?:

இல்லை. இல்லவே இல்லை. அவை அவ்வாறு சித்தரிக்கப் பட்டன. ஆனால் உண்மையில் ஒரு பெண் எதற்காக மார்பகத்தில் பால் சுரக்கிறாளோ அதே காரணத்திற்காகத்தான் பசுக்களும் பிற பாலூட்டிகளும் பால் சுரக்கின்றன. ஒரு பெண் தன் குழந்தைக்கு ஊட்டமளிக்கவே பால் சுரக்கிறாள். அது போலவே பசுக்களும் அவற்றின் குழந்தைகளின் பசி நீக்கவும் ஊட்டச்சத்து அளிக்கவும் மட்டுமே பால் சுரக்கின்றன. கரு தரித்து பிள்ளை பிறந்தால் தான் ஒரு பாலூட்டியால் பால் தர முடியும்.  எனவே பாலுக்காக பண்ணையில் வளர்க்கப்படும் பசுக்கள் ஒவ்வொரு வருடமும் பிரசவிக்கப் படுகின்றன. ஒரு பிள்ளையைப் பெற்று எடுக்கும் வலியை உணர்வது தாய் மட்டும் தான். வருடா வருடம் வன்முறையாகக் கற்பழிக்கப்பட்டு பிள்ளை பெறச்செய்தால் ஒரு பெண்ணின் வலி எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கும் ஒரு பசுவின் வாழ்க்கை.

இன்று பசுக்களும் எருதுகளும் இராட்சத இயந்திரங்கள் ஓடும் தொழிற்சாலைகளில் கட்டிவைக்கப்பட்டு இயந்திரங்கள் மூலமாக பால் கறக்கப்படுகின்றன. இயந்திங்கள் அதிகப் பாலை உறிஞ்சி எடுப்பதற்கே முற்படுகின்றன. இயல்பாக சுரக்கும் பாலை விட பல மடங்கு அதிகம் பாலை கறப்பதற்கு அவை அதிக அழுத்தம் கொடுக்கின்றன. இந்த அழுத்தமானது பசுவிற்கு உயிர் போகும் வலியை உண்டு செய்கின்றன. ஆனால் நமக்கென்ன கவலை? என்று நாம் பாலை உறிஞ்சுகிறோம். மேலும் வேலை செய்யும் ஆட்கள் பெரும்பாலும் இயந்திரங்களை சரியாக கவனிப்பதில்லை. அவை சரியான நேரத்தில் நிறுத்தப்படுவதில்லை. அதனால் பால் வற்றிய பிறகும் கூட அவை மடியை விடாமல் உறிஞ்சுகின்றன. இது மிகவும் கொடிய வேதனையாகும். பெருபாலும் பாலுக்காக பண்ணையில் வளர்க்கப்படும் பசுக்கள் அத்தியாவசிய தேவைகள் கூட பூர்த்தியாகாத வகையில் மிகவும் குறுகிய இடங்களில் கட்டி வைக்கப்படுகின்றன. அவை பால் கொடுக்கும் இயந்திரங்கள் போல நடத்தப்படுவது வேதனை. அநேக பசுக்கள் தினந்தோறும் ஹார்மோன் (மரபணு) ஊசி மூலம் அதிகப் பால் கறக்க உந்தப்படுகின்றன. (இதன் காரணமாகவே பசுக்கள் பால் கறக்காமல் விட்டால் அவற்றின் மடி வீங்கிப் போகிறது இயல்பு நிலையில் கன்றுக்கு பால் ஊட்டிய பிறகு எந்த பாலூட்டிக்கும் மடியில் பால் தங்கி வீக்கம் ஏற்படாது.)  ஆக்ஸிடாக்ஸின் (OXYTOXIN-SCHEDULE H DRUG) எனப்படும் வேதிப்பொருள் பரவலாக அனைத்து பால் பண்ணைகளிலும் உபயோகிக்கப்படுகிறது. இது சட்டவிரோதமானதும் கூட. இந்த வேதிப்பொருள் அதிகப் பால் சுரப்பதற்காக உபயோகிகப்படுகிறது. ஆனால் இது பசுக்களின் அடிவயிற்றில் பிரசவ காலத்தில் ஏற்படும் வலிக்கு சமமான வேதனையை உருவாக்குகிறது. D.A.V.Health Research foundation-ன் பிரதமரான டாக்டர். R.P.பர்ஷார் என்பவரின் ஆய்வுக்கட்டுரையில் அவர் கூறுகிறார், "உத்தரப் பிரதேசம், ஹரியானா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களைச் சேர்ந்த 68-83% பால் பண்ணைகள் ஆக்ஸிடாக்ஸின் ஊசியை பயன்படுத்துகின்றன. கன்று ஈன்ற பின் 6 மாதங்கள் வரை ஒரு பசு பால் சுரக்கும். ஆனால் கூடுதலாக பல மாதங்கள் செயற்கை கருத்தறிப்பு செய்யாமலே ஆக்ஸிடாக்சின் ஊசியை செலுத்துவதன் மூலம் பால் கறக்கப் படுகின்றது. இந்த ஆக்ஸிடோக்சின் என்பது கறக்கப் படும் பாலில் கலந்து வருவதால் பால் என்பது ஒரு ஆட்கொல்லி விஷமாக மாறுகிறது. தினந்தோறும் இத்தகைய பாலை உட்கொள்வதால் 55க்கும் அதிகமான வியாதிகளை நாம் உட்கொள்கிறோம் என்பது நிதர்சனமாகிறது"
 

2.செயற்கை கருத்தரிப்பு:

இந்தியா உலகின் மிக அதிகமான பால் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் முன்னிலையில் உள்ளது. இதற்கு காரணம் செயற்கை கருத்தரிப்பு முறை. இம்முறையில் காளை மாட்டின் விந்தணு சேகரிக்கப்பட்டு பின் ஒரு பசுவின் இனப்பெருக்கக் குழாயினுள் செலுத்தப்படுகிறது. இது மிகவும் தேர்ந்த மருத்துவ வல்லுநர்களால் செய்யப்பட வேண்டியது. ஆனால் நம் நாட்டில் மனிதனுக்கு வைத்தியம் பார்க்கவே உண்மையான மருத்துவர்கள் குறைவு. எனவே இந்த கருத்தரிப்பு செயல்முறை உள்ளூர் ஆசாமிகளால் பாதுகாப்பற்ற முறைகளில் செய்யப்படுகிறது.
1.ஊசிகள் சுத்திகரிக்கப்படுவதில்லை.
2.ஒரே ஊசி பல முறை பல மிருகங்களுக்கு இடையே உபயோகிக்கப்படுகிறது.
3.அடிப்படை சுகாதாரத் தேவைகள் மறுக்கப்படுகிறது.
4.பசுக்கள் சித்ரவதை செய்யப்படுகின்றன.
5.கட்டி வைத்து அடிக்கப் படுகின்றன.

இந்திய பால் பண்ணைகளின் உண்மை நிலை:  
பாரம்பரியமாக பாலுக்காக வளர்க்கப்பட்ட பசுக்கள் மற்றும் இதர கால்நடைகள் சுதந்திரமாக சுற்றித் திரிந்து இயற்கையான உணவு உட்கொண்டு கலாச்சாரம் மற்றும் குடும்பத்தின் அங்கமாகவும் மதிக்கப்பட்டு, அவைகளின் உணர்ச்சிகளுக்கும் மதிப்பளிக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது இந்தியப் பால் பண்ணைகளின் நிலையே வேறு. பணம் எனும் மாய வலையில் சிக்கி உழல்வது மிருகங்களோ மனிதர்களோ தனிப்பட்ட முறையில் அல்ல. மொத்த பூமியும் தான். பால் கறந்து சிறுதொழில் செய்து வந்த குடும்பங்கள் அளவில் பெரிய இயந்தர தொழிற்சாலைகளால் நசுக்கப்பட்டு விட்டன. அவை லாபநோக்கில் செயல் படும் எந்திர அரக்கர்களாகவே இருக்கின்றன. அங்கே மிருகங்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு இல்லை. மனித நலன் எந்திரத்தனமாக துரு பிடித்துப் போயிருக்கிறது. கண் முன்னே துடிக்கும் பசுக்களை பற்றி கவலை படாதவர்கள் எங்கேயோ காசு கொடுத்து பால் வாங்கும் மனிதர்களின் ஆரோக்கியத்தைப் பற்றியா யோசிக்கப் போகிறார்கள்? அவர்களுக்கு தேவை பணம். அதை கொடுப்பவன் பாலை வாங்கினால் என்ன? நோயை வாங்கினால் அவனுக்கென்ன? பெரிய அளவில் வெளியே தெரியாத இத்தகைய உண்மைகள், மலட்டுத்தன்மை, எலும்புருக்கி நோய் போன்ற சொல்ல முடியாத வியாதிகளாய் சமூகத்தில் பரவி விட்டன. 
மூச்சுக் காற்று மூலமாக பரவும் நோய்களைக் காட்டிலும் எச்சில், பால் மற்றும் உடற்கழிவுகளால் பரவும் வியாதிகள் மிகவும் கொடியவை. பால் பொருட்களுக்கு பெருகியுள்ள தேவைகளால் பசுக்கள் வருடத்திற்கு இரண்டு முறை செயற்கையாக கருத்தரிக்கப் படுகின்றன. பிரசவ காலமோ 7 மாதங்கள். ஆனால் 3 மாதத்திற்கு ஒரு முறை ஊசி மூலம் உந்தப்பட்டு பால் கறக்கப்படுகிறது. இதனால் பிரசவமாக இருக்கும் பொழுதே பால் கறக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக பால் கறக்கப் படுவதால் மடியின் சுரக்கும் தன்மை நலிவடைகிறது. இதனால் வேதிப்பொருட்கள் மடியின் உட்புறம் அமைந்துள்ள திசுக்களை உடைத்து பாலுடன் சேர்த்து சுரக்கச்செய்கிறது. நாளடைவில் இது கீடாஸிஸ்(KETOSIS) எனும் வியாதியாக பசுவை தொற்றுகிறது. மேலும் பால் கறக்கும் இயந்திரங்களும், கைகளும், பசு நின்றுகொண்டிருக்கும் குறுகிய மேடைகளும் சுத்தம் செய்யப்படுவதில்லை. இதனால் மாஸ்டிடிஸ்(MASTITIS) எனும் நோய் பசுக்களை மேலும் தொய்வடையச் செய்கிறது. பசுக்கள் ஹார்மோன் ஊசிகள் மூலமாக ஆயுள் நீட்டிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் இத்தகைய பசுக்களில் 20% பசுக்கள் மாமிசத்திற்காக சட்டவிரோதமாக கடத்தப் படுகின்றன. மேலும் சில பசியினாலும் சோர்வினாலும் இறக்கின்றன. 
மனித நலன் எந்திரத்தனமாக துரு பிடித்துப் போயிருக்கிறது. கண் முன்னே துடிக்கும் பசுக்களை பற்றி கவலை படாதவர்கள் எங்கேயோ காசு கொடுத்து பால் வாங்கும் மனிதர்களின் ஆரோக்கியத்தைப் பற்றியா யோசிக்கப் போகிறார்கள்? அவர்களுக்கு தேவை பணம். அதை கொடுப்பவன் பாலை வாங்கினால் என்ன? நோயை வாங்கினால் அவனுக்கென்ன?

இந்திய அரசின் 2003-ம் ஆண்டின் கால்நடை எண்ணிக்கை புள்ளியியல் படி இந்தியாவில் 283.1 மில்லியனன் கால்நடைகள் இருந்தன. 2007-ம் ஆண்டு 282 மில்லியன் கால்நடைகள் இருந்ததாய் அறிவிக்கப்பட்டது. 187.5 மில்லியன் பசு மற்றும் இதர கால்நடைகள், மற்றும் 97.9 மில்லியன் எருதுகள் அவற்றில் அடக்கம். ஐ.நா.வின் 2005 புள்ளிவிவரப்படி இந்தியாவில் தான் அதிக எண்ணிக்கையில் கால்நடைகள் இருந்தன. ஐ.நா.வின் உணவ் மற்றும் விவசாயத்துறையின் புள்ளி விவரப்படி 530,351,770 டன் பால் உலகம் முழுவதும் உட்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தியா மட்டுமே அதில் 75,270,950 டன் பாலை உட்கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் 23,950,320 டன் மற்றும் வங்காளதேசம் 2,307,590 டன் பால் பொருட்களை முறையே உட்கொண்டிருக்கின்றன.  
 
மும்பை மாநகரில் 2005-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் 2500-க்கும் மேற்பட்ட எருதுகள் மற்றும் பசுக்கள் தப்பிக்க வழியின்றி கட்டப்பட்டிருந்ததால் உயிரிழந்தன. பண்ணையில் வளர்க்கப்பட்ட பசுக்கள் பல கன்றுகளை தேடி அலைந்தன. ஆனால் மக்கள் கவலைப்பட்டதோ பால் விலை ஏற்றத்திற்காக மட்டுமே. :( இது பண்ணை முறை மிருகங்கள் சந்தித்துக்கொண்டிருக்கும் அநேக கொடுமைகளுக்கு ஒரு உதாரணம். பீட்டா, நீலச்சிலுவை சங்கம் மற்றும் இதர மிருக நல அமைப்புகள் நடத்திய ஆய்வில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் 2000க்கும் மேற்பட்ட சட்ட விரோதமான பால் பண்ணைகள் இருப்பது தெரிய வந்தது. அவற்றில் ஒவ்வொன்றிலும் தலா 2000-3500 கால்நடைகள் வரை அடைத்து வைக்கப்பட்டிருந்தன. இத்தகைய கால்நடைகள் ஒரு நாளுக்கு 14 கிலோ அளவிலான பால் கறக்கும் வகையில் வதைக்கப்பட்டிருக்கின்றன. 

 டெல்லி போன்ற பெருநகரங்களில் இருக்கும் பல பால் பண்ணைகள் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு அடிப்படை வசதி இல்லாமல் இருக்கின்றன. போதிய சுகாதார வசதிகள் இல்லை. கன்றுகள் தாயிடம் இருந்து தொலைவில் கழிவுகளுக்கு மத்தியில் கட்டிப் போடப்பட்டிருக்கின்றன.  அவைகளில் பல காசநோய், தோல் வியாதி போன்றவற்றால் அவதிப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலைகளினால் நூற்றுக்கணக்கான பசுங்கன்றுகள் மரணமடைகின்றன. அவை பிறந்து 24 மணி நேரம் கூட சரியான வாழ்வை வாழ்வதில்லை. இவ்வாறு சுகாதாரமற்ற சூழ்நிலையினால் இறக்கும் பசுக்களின் பிரேதங்கள் கசாப்புக் கடைகளுக்கு அனுப்பபடுகின்றன(இது நிச்சயம் ஹலால் அல்ல). அங்கே இவற்றின் உடல் தோலுக்காக பதனிடப்படுகின்றன. 
பசுக்கள் மனிதர்களைப் போலவே தனது குழந்தைகளை மிகவும் நேசிக்கும் பண்புடையது. அவை நமது அசுரத்தனமான பால் தேவைக்காக மீண்டும் மீண்டும் கருத்தரிக்கப் படுகின்றன. அவ்வாறு பிறக்கும் கன்றுகளும் மிகவும் சீக்கிரத்திலேயே தாயிடம் இருந்து பிரிக்கப் பட்டு தோல் பட்டறைக்காக தயார் செய்யப்படுகின்றன. இடைப்பட்ட காலத்தில், கயிற்றால் கட்டப்பட்டிருக்கும் பசுக்கள் தாயிடம் சேர்வதற்காக மிகவும் மெனக்கெடுகின்றன. இதனால் கயிற்றில் சிக்கி உயிரிழக்கவும் செய்கின்றன. இது ஒரு கொடுமையான மரணம் ஆகும். அவை கதறுவது அர்கில் வசிப்பவர்களுக்கு கேட்காமலிருக்க கன்றுகளின் வாய்கள் இறுகக் கட்டப்படுவது மேலும் கொடுமை. நமது அன்றாடத் தேவைக்கான பால் உற்பத்தியாகிக்கொண்டிருக்கும் வேளையில் பாலுக்கு சொந்தம் கொண்டாட வேண்டிய கன்றுகள் ஒருமூலையில் மெல்ல மெல்ல செத்துக் கொண்டிருக்கின்றன. 


தோல் பட்டறை:இவ்வாறு மரணமடையும் கன்றுகளின் பிரேதங்கள் வாரத்திற்கு ஒரு முறை ஒரு தோல் வியாபாரியிடம் மொத்தமாக ஒப்படைக்கப் படுகிறது. சில சமயங்களில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் கன்றுகளும் ஈவிரக்கமின்றி கொடிய முறையில் கடத்தப் படுகின்றது. அவ்வப்போது கன்றுகள் மாமிசத்திற்காகவும் கசாப்புக் கடைகளுக்கு அனுப்பப் படுகிறது. பெண் கன்றுகள்/பசுங்கன்றுகள் இதற்கு மேலும் கொடிய வாழ்க்கையை அனுபவிக்கின்றன. அவை தாய்ப் பசுவின் பால் சுரக்கும் வகையில் ஓரிரு நிமிடங்கள் பசுவின் அருகே நிறுத்தப்பட்டு பின் பால் சுரந்ததும் பிரிக்கப்படுகின்றன. இது ஒரு குழந்தையை தாய்ப்பால் குடிக்க விடாமல் செய்வதற்கு சமமான பாவமாகும். இவ்வாறு வளர்க்கப்பட்டு அதன் தாய்ப் பசு சந்தித்த கொடுமைகளை சந்திக்க அதன் இடத்தில் வைக்கப்படுகின்றது. இது ஒரு முடிவில்லா சுழற்சி முறையில் நடக்கிறது.

பிரபல பால் பொருட்கள் தயாரிப்பாளரான அமுல் (AMUL) நிறுவனம், வருடத்திற்கு 80,000 கன்றுகள் மரணத்திற்குத் தள்ளப் படுகின்றன என்று ஒப்புக் கொள்கிறது.

 
இப்படியான இழிவான மரணத்திற்குப் பின்பும் அக்கன்றுகள் பெரும்பாலும் தாய்ப் பசுவின் முன்னிலையிலேயே தோலுரிக்கப்படுகின்றன, மற்றும் கொடிய முறையில் தாக்கப்படுகின்றன என்பது கசப்பான உண்மை.இந்தக் கொடுமைகளுக்கு முழுக் காரணமாக பண்ணை உரிமையாளர்களையோ பணியாளர்களையோ சொல்லிவிட முடியாது.  அவர்களுக்கு பால் உற்பத்தி மட்டுமே முக்கியமாகத் தெரிகிறது. ஏனென்றால் பொதுமக்கள் அவற்றை வாங்குகிறார்கள், குடிக்கிறார்கள். பசுக்களிடம் அன்பாகப் பழகி செண்பகமே செண்பகமே என்று பாட்டுப் பாடி பால் கறந்தால் இப்போதிருக்கும் அசுரத்தனமான பால் தேவையை பூர்த்தி செய்ய முடியாது. எனவே 80% காரணம் இத்தகைய கொடுமைகளுக்கு காசு கொடுத்து ஆதரவு தரும் மக்கள் தான். காசைக் கொடுத்து பாவத்தை விலைக்கு வாங்குவதும் ஏனோ?

கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்கள் பண்ணை மாடுகளின் உண்மை நிலையை விளக்கும்.

கன்று பிறந்து கிழே விழும்முன்னே தாய் எருது விரட்டப்படும் கொடுமை, பிஞ்சுக் கன்று முகத்தில் சங்கிலியால் கட்டப்பட்ட அவலம், சாப்பிட முற்பட்ட எருதை பணியாளர் ஒருவர் முகத்தில் அடித்து துன்புறுத்திய கொடுமை போன்றவற்றை பீட்டா நிறுவனத்தின் ஆய்வாளர்கள் நேரில் கண்டதாகக் கூறுகின்றனர். பசு இறைச்சி: நீங்கள் குடிக்கும் பாலின் உப உற்பத்தி
ஒரு மாடு இயற்கையாக 18-20 வயது வரை வாழும். ஆனால் இரவு பகலாக பால் கறப்பதினாலும், தொடர்ச்சியான கருத்தரிப்பினாலும் பல்வேறு நோய்களுக்கு இடமாகும் பசுக்கள் 6-7.5 வருடங்களையே வாழமுடிகிறது. இந்தியாவிலேயே சில மாநிலங்களில்(கேரளா, மஹாராஷ்ட்ரா, ) பசுக்களை சட்டரீதியாகக் கொல்லும் அனுமதி இருக்கிறது. பசுக்கள் கனரக வாகனங்கள் மூலமாகவும், தொடர்வண்டி மூலமாகவும் அத்தகைய மாநிலங்களுக்கு கடத்தப் படுகிறது. மூக்கணாங்கயிறு, மற்றும் பிற கட்டுக்கள் மூலம் அவை கொடிய முறையில் கடத்தப்படுகிறது. சில கால்நடையாகவே கடுமையான வெயிலின் ஊடே ஓரிரு தினங்களுக்கு இழுத்துச் செல்லப்படுகின்றன. அவைகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு மறுக்கப்படுகின்றது. இதனால் பல மாடுகள் வழியிலேயே சோர்ந்து விழுகின்றன. அவற்றை கிளப்ப மிளகாய்த் தூள் கண்களில் அப்பப்படுகிறது. பிறப்புறுப்பு மற்றும் ஆசனவாயில் நெருப்பு வைக்கப்படுகிறது. பின்னர் அவை மிகவும் வன்முறையாக வண்டியில் ஏற்றப்படுகிறது. மாமிசச் சாலைக்கு வரும் முன்பே பல பசுக்கள் மரணிக்கின்றன.  கால்கள் உடைகின்றன. உயிருடன் இருக்கும் பொழுதே கொம்புகள் உடைக்கப் படுகின்றன. வால்கள் வெட்டப்படுகின்றன. மேலும் ஒவ்வொரு கொலையும் பிற மாடுகளுக்கு முன்பே நடத்தப் படுகின்றன.

இத்தனைக் கொடுமைகளும் நீங்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை லாபம் எனும் பெயரில் சம்பாதிப்பதற்காகவே!!!

விலைக்கு வாங்கப்படும் வியாதிகள்

இறைச்சி, பால், தோல்... இத்தனையும் கொடுக்கும் மாடுகளையே பண்ணை உரிமையாளர்கள் மதிப்பதில்லை. சுகாதாரம் இல்லை, மருத்துவ வசதி இல்லை என ஆயிரம் இல்லை-கள். இப்படிப்பட்ட நோய் கண்ட மாடுகள் தரும் பாலையும், இறைச்சியையும் காசு கொடுத்து வாங்கும் யாரோ-ஆன உங்களின் ஆரோக்கியத்தைப்பற்றி அவர்களுக்கு என்ன கவலை இருக்கப் போகின்றது. 
ஐ.நா. சபையின் உணவு மற்றும் ஆரோக்கியத்துறையும், உலக சுகாதார அமைப்பும் 2010-ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின் படி பால் மற்றும் பால் பொருட்களை தவிர்ப்பது ஆண்டொன்றிற்கு செலவிடப்படும் உலக மருத்துவ நிதியில் 73% சேமிக்கும். பால் மற்றும் பால் பொருட்கள் உட்கொள்வது 67 வெவ்வேறு விதமான வியாதிகளையும் நோய்களையும் உண்டாக்குவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அவற்றில் முக்கியமான நோய்கள் சில:
1.உடல் பருமன்(OBESITY)
2.நீரிழிவு(ADULT_ONSET TYPE 2 DIABETES)
3.முதுகெலும்பு மற்றும் மூட்டு வலி(OSTEOPOROSIS)
போன்றனவாகும். 


உலக சுகாதார அமைப்பை(WHO) சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், இந்தியாவில் 33% மக்கள் பால் மற்றும் பால் பொருட்களை ஜீரணிக்க முடியாதவர்களாக(LACTOSE INTOLERANT) இருக்கிறார்கள். இதில் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் 79% பேர். இதன் மூலம் பெரும்பாலான மனிதர்களின் செரிமான இயக்கம் பால் பொருட்களில் உள்ள சக்கரை அணுக்களை செரிக்க இயலாதவையாக இருக்கின்றது. பாலில் ஈ.கோலி மற்றும் ஸ்டெஃபிலோகாக்கஸ் எனப்படும் கிருமிகள் மிகவும் எளிதாக பெருகுகின்றன. இது டையரியா, காலரா போன்ற நோய்களைப் பரப்பும். மேலும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் தேசிய அளவில் பல்வேறு பண்ணைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட பால் மாதிரிகளில் நடத்திய ஆய்வில், DDT, ஆர்செனிக், காட்மியம், மற்றும் உயிர்க்கொல்லியான பூச்சி மருந்து HCH போன்றவை அதிக அளவில் இருப்பதை உறுதி செய்தது. HCH என்பதன் அனுமதிக்கப்பட்ட உச்ச அளவு ஒரு கிலோவிற்கு 0.1 மில்லிகிராம் என்பதாகும். ஆனால் ஆய்வில் ஒரு கிலோவுக்கும் குறைவான ாளவு பாலில் 5.7 மில்லிகிராம் HCH கலந்தது தெரிய வந்தது.

தாய்ப்பால் தவிர்த்து பிற பாலூட்டிகளின் பாலை உண்டு வளரும் குழந்தைகள் நீரிழிவு நோய்க்கு வெகு எளிதில் ஆளாகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. பால் மற்றும் மிருக உடலில் இருந்து வரும் புரதம், இரண்டுமே கால்சியத்தை சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடுகின்றன என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. இதனால் முதுகுத்தண்டு பலகீனமாகிறது.அதீதமான தேவை இருப்பதால், கலப்படம் என்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. 
சுத்திகரிக்கப்படாத தண்ணீர் கலக்கப்பட்ட பாலுடன் மெலாமைன் எனப்படும் வேதிப் பொருட்களைக் கலப்பதால் புரத சோதனையை(PROTEIN TEST) எளிதில் தேறிவிடுகிறது பசும்பால். பால் உற்பத்தியை உண்டு பண்ணும் ஆக்ஸிடோக்சின் புற்று நோயை உண்டு பண்ணுகிறது. ஆய்வில் பணியாற்றிய விஞ்ஞானிகள் தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் "பால் மற்றும் பால் பொருட்களை உட்கொள்ளும் மனிதர்கள் புற்றுநோய், உணவுப்பாதை அரிப்பு, மண்ணீரல் புற்றுநோய் போன்ற நோயகள் எளிதில் தாக்கும் அபாயத்தில் உள்ளனர்." என்று கூறினர்.


எனவே பால் பொருட்களை தவிர்ப்பது மிருகங்களுக்கு மட்டுமன்றி மனிதர்களுக்கும் நலமாகும்.

சுற்றுச்சூழல் நலம் பேண:
மிருகங்களிடம் எளிதில் பரவும் லெப்டோஸ்பைரா கிருமிகள் உற்பத்தியாகின்றன. பால் பண்ணைகள் இத்தகைய கிருமிகளை உங்கள் வீட்டிற்கு வரும் பால் பாக்கெட்டின் வழியாக பரப்புகின்றன என்பது சோகமான உண்மை. மாடுகளின் கழிவு முறையாக அப்புறப்படுத்தாவிட்டால் ஈத்தேன், மீத்தேன் போன்ற விஷவாயுக்களை உருவாக்கும். இது ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்படுத்தும். ஒரு வருடம் முழுவதும் பால் பண்ணைகளில் உருவாகும் நச்சுவாயுவானது, மூன்று வருடம் முழுவதும் பல்வேறு கனரக வாகனங்கள் வெளியிடும் கார்பன் மோனாக்சைடுக்கு சமானம் என்கிறது ஒரு ஆய்வு. மும்பையை சேர்ந்த குழந்தைகள் நல மற்றும் ஊட்டச்சத்து ஆய்வாளர், மற்றும் மருத்துவர். ஷோபா ராவல், நகரங்களில் உள்ள பால் பண்ணைகளில் உள்ள பெரும்பாலான மாடுகள் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளன என்று கூறுகிறார். எனவே பசும்பாலை காசநோயின் காரணியாக கூறுகிறார். வருடத்திற்கு 20,000 காசநோயாளிகள் மும்பையில் மட்டுமே காணப்படுகிறார்கள் என்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. 
பால்-தவிர்ப்பது மற்றும் ஈடு செய்வது எப்படி:

பசும்பால், மனித உடலில் சுரக்கும் பாலைக் காட்டிலும் 300% அதிக புரதத்தை கொண்டுள்ளது. இது பருமனான உடலையும் பல்வேறு வகையான நோய்களையும் புரதத்துடன் சேர்த்து நமக்கு அளிக்கிறது. ஆனால், புரதம் உடலுக்கு அத்தியாவசிய தேவை ஆகும். எனவே தாவர ஆதாரங்களில் இருந்து வரும் புரதம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதாகும். தவிர்ப்பது என்பது மிகவும் எளிது. உதாரணமாக காபி பிரியர்கள் பால் சேர்க்காத வறைக்காப்பி அல்லது கடுங்காப்பியை அருந்தலாம். அதில் சக்கரைக்கு பதிலாக கருப்பட்டி சேர்ப்பது இன்னும் ஆரோக்கியமானதாகும். நம் உடலுக்கு சேர்க்கக்கூடிய அதிக பட்ச புரதத்தின் அளவு ஒரு கிலோ உடல் எடைக்கு 0.80கிராம் அளவான புரதம் ஆகும். மேலும், ஈடு செய்வ்தற்கு சோயா, சோயா பால், நிலக்கடலை மூலம் தயாரிக்கப்படும் பால் போன்றவை சரியான தேர்வாகும். ஒரு கிலோ மாமிசத்திலிருக்கும் புரதத்தை விட 30க்ராம் சோயாவில் உள்ள புரதம் அதிகம். மேலும் சோயா தாவரம் ஆதலால், இதில் கொழுப்பும் நோய்களும் கிடையாது. பெண்கள் மெனோபாஸ், உதிரப்போக்கு சமயங்களில் சோயா உட்கொள்வது அவர்களுக்கு தெம்பை தரும். சோர்வை நீக்கும். 
நனிசைவராய் மாறுவதன் மூலம் நீங்கள் இழக்கப்போவது பாவம், குற்ற உணர்ச்சி, கொழுப்பு மற்றும் இதர நோய்களைத்தான். 
ஆனால் நீங்கள் பெறுவது நன்மைகள் மட்டுமே.
கீரை வகைகள், பீன்ஸ், தக்காளி, கோசு வகைகள், சோயா, பாதாம், முந்திரி போன்ற உலர்பழங்கள் போன்றவற்றில் உடலுக்கு தேவையான அனைத்து கால்சியம், இரும்பு போன்ற சத்துக்களும் அடங்கும். இத்தனை சக்தியும், மாமிசத்தில் கிடைக்கும் போது கொழுப்பும் நோயும் இலவச இணைப்பாக கிடைக்கும். 
இவ்வளவு கொடிய வெள்ளை விஷத்தை இனியும் வாங்க நீங்கள் முட்டாள் இல்லை என்பதை நான் அறிவேன். இந்தக் கட்டுரையை வெற்றிகரமாக தொடங்கி முடிக்க எனக்கு உதவிய மனிஷா ஹரிஹரன், லோகஸரஸ்வதி மற்றும் ப்ரவீண்ராஜ், நிரஞ்சன் போன்ற நண்பர்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன். நரகத்தில் இருந்து மீண்டு மனிதம் எனும் அமிர்தம் பருக மிருக வதையை தவிர்ப்போம் வாருங்கள். ஆய்வுக் கட்டுரையை ஆங்கிலத்தில் அமைத்து எனக்கு தந்து உதவிய பீட்டா அமைப்பிற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 
நன்றி,
என்றும் காதலுடன்,
ஜானெஹ் ஷங்கர்.

ஆங்கிலத்தில் படிக்க இங்கே சொடுக்கவும். 
To Read in English Click here.
 இந்த வலைப்பதிவு கிரியேட்டிவ் காமண்ஸ் வலைதள எழுத்துடைமை பாதுகாப்பு உரிமத்தின் கீழ் பாதுகாக்கப்படுள்ளது. அனுமதியின்றி மறுபிரசுரம் செய்யவோ, திருத்தம் செய்யவோ கூடாது. வலைதளத்தின் பெயரில் பகிர்ந்து கொள்ளலாம்.

9 comments:

 1. WONDERFUL, JONEH!! PLEASE SUBMIT THIS TO SOME MAGAZINES LIKE AVAL VIKATAN...

  ReplyDelete
  Replies
  1. Thank you so much for ur support and encouragement!

   Delete
 2. @Arun Yeah my teacher also suggested to do so. But I dunno how to present these articles to mass media. :) Thanx for your encouragement! Spread smiles.

  ReplyDelete
 3. Johneh, I'm going to read and re-read it again and again, and share it with my friends.
  Very well written! Even though I have read Peta's milk report several times, reading this made my heart sink :(
  Particularly the ones: 'Are the ones who do not bother about the suffering of cows in front of them, going to care for the remote human consumers?'
  'Milk is rape', the hypocrisy of worshipping cows in temples and using their skin for sandals, are simply brilliant!

  ReplyDelete
 4. i am deeply saddened to see this..why do humans only want themselves to be comfortable cause untold suffering to innocent creatures??

  ReplyDelete
 5. Good article. Really Well written and is a necessary info for South Indian People.

  ReplyDelete
 6. Excellent article.. You must publish this on any kind of weekly magazines,,

  ReplyDelete
  Replies
  1. I've sent this article to major medias like Vikatan, Dinakaran etc. They simply neglect and Hesitate to bring out the truth! Have u any links? to Publish!?

   Delete
 7. Such a well-written article but the truth of the matter is most of humanity will prefer ignorance in this matter but still continue their advocacy for the rights of "other animals". We just haven't been told enough to think about our food sources and it's so refreshing to see this being brought up. Thank you sincerely.

  ReplyDelete

Please rate the article and comment your Valuable feedback.